அரசாங்கம் எங்களை கூட்டங்களுக்கு அழைப்பது இல்லை - லங்கா சமசமாஜக் கட்சி
அரசாங்கம் எங்களை கூட்டங்களுக்கு அழைப்பதும் இல்லை- நாங்கள் கொடுக்கும் யோசனைகளை கேட்பதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Tissa Vitarana) தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அரசாங்கத்துக்கும் எங்களுக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. மக்கள் இதனால் கொதிப்படைந்து இருக்கின்றனர். நாங்கள் பதினொரு கட்சிகள் ஒன்றாக இணைந்து இருக்கின்றோம்.
அனைவரும் ஒவ்வொரு வாரமும் கூடி கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். அந்த யோசனைகளை கோவையாக தயாரித்து அரசாங்கத்துக்கு வழங்க இருக்கின்றோம். அரசாங்கத்துக்கு மட்டுமல்ல பகிரங்கமாக கூட்டம் கூட்டி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்.
விலைவாசி உயர்வு என்பது உலக நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் பிரச்சினை தான்.ஆனால் அரசாங்கம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நிறுத்திவிட்டு அதற்கான நிதியை மக்களின் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதில் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
