இந்தியப் பெருங்கடல் உலக அரங்கின் கவனத்தை ஈர்த்த பொருளாதார மையம் : ஜெய்சங்கர் விளக்கம்
இந்தியப் பெருங்கடலை சுதந்திரமான, திறந்த இடமாக மாற்றுவதில் அதன் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் (Indian Ocean Rim Association) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் அர்ப்பணிப்பு எப்போதும் நிலையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்டை நாடுகளுக்கு
இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் செயன்முறையின் கீழ் செயற்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி, நிலையான மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்பு முதலீடு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கொள்கைகள் என்பவற்ற்றில் இந்தோ-பசுபிக் பரந்த பார்வையைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தோ-பசுபிக் மீதான பாதுகாப்பு குறித்து இந்தியாவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் , 'IORA' வின் 22வது அமைச்சரவைக் சபை கூட்டத்தில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை எதிர்வரும் காலங்களில் நடைமுறை வடிவம் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடல் ஒரு குறிப்பிடத்தக்க நீர்நிலை மட்டுமல்ல, ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாய வழித்தடமாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் நிலைத்திருப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை மிகவும் முக்கியம் என்றும் அது உலகளவான பார்வைக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.