உயிரை பணயம் வைத்து 600 பேரை காப்பாற்றியவருக்கு கிடைத்த பாராட்டு
தனது உயிரை பணயம் வைத்து நிகழவிருந்த புகையிரத விபத்தைத் தடுத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்த ஹப்புத்தளை எச்.எம்.விஜேரத்ன ஆற்றிய பணிக்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அவருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி மாலை ஹப்புத்தளை கிளானோர் தோட்டத்தின் புகையிரத வாயிலுக்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
நிகழவிருந்த பேரனர்த்தம்
இதன்போது கொழும்பில் இருந்து பதுளை நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்தது.
தங்கமலை தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் ஹப்புத்தளை எச்.விஜயரத்ன ரயிலின் பாதைக்கு வந்து, ஆபத்தை உணர்த்தி, ரயிலை உடனடியாக நிறுத்தியதால், உயிர் மற்றும் உடமை சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
உயிரைப் பணயம் வைத்து
இதன்போது அவர் தனது உயிரைப் பணயம் வைத்து இந்த செயலை செய்துள்ளார். அவரின் வீரதீர செயலைப் போற்றும் வகையில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவரின் வீரச் செயலைப் பாராட்டி 100,000 ரூபா பணப்பரிசு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர். பந்துல குணவர்தனவால் வழங்கி வைக்கப்பட்டது.
