தொடருந்துடன் மோதிய மகிழூந்து: கர்ப்பிணி பெண்ணும் மகளும் உயிரிழப்பு
தொடருந்துடன் மோதி விபத்து
காலி – மாகல்ல அனுலாதேவி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் மகிழூந்து ஒன்று தொடருந்துடன் மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
காலி – மாகல்ல அனுலாதேவி பெண்கள் கல்லூரிக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மகிழூந்தில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்கப்பட்ட போதிலும் கடவைக்குள் நுழைந்த மகிழூந்து
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோதே இவ்வாறு விபத்து இடம்பெற்றுள்ளது.
எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்கப்பட்ட போதிலும் மகிழூந்து தொடருந்து கடவைக்குள் நுழைந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
