பெற்றோரின் மூட நம்பிக்கை - சிறுமிக்கு பூசாரியால் ஏற்பட்ட அவலம்
கணவனுக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கவும் தமது மகளான சிறுமிக்கு தெய்வீக ஆசீர்வாதம் வேண்டியும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட பூசாரியிடம் கண்மூடித்தனமாக மகளை ஒப்படைத்த பெற்றோருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
12 வயதே ஆன பருவமடையாத அந்த சிறுமியை எட்டு நாட்களாக அறையொன்றில் அடைத்துவைத்து தியான பூஜை எனும் பேரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் பூசாரி .
இந்த சம்பவம், காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக ஓபாத காவல்துறையினர் தெரிவித்தனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதி
சிறுமி மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தவேளை சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பூஜை செய்து எட்டு நாட்கள் கழித்து கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொடுப்பேன் என பூசாரி கூறியதையடுத்து, பூசாரியுடன் அந்த சிறுமி வீட்டின் ஒரு அறையில் தங்கியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுமியைத் தவிர அனைவரையும் தான் தெரிவிக்கும் வரை வீட்டை விட்டு வெளியேறுமாறு பூசாரி கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கடவுளின் விருப்பத்தின் பேரில், சிறுமியை பூசாரியிடம் ஒப்படைத்துவிட்டு குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்றுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டவேளை
அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது, சிறுமியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும், யாரிடமாவது சொன்னால், குடும்பத்தாரைக் கொன்றுவிடுவதாகவும் கத்தியைக் காட்டி மிரட்டியதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றுகாவல்துறையினர் தெரிவித்தனர்.
தனக்கு நேர்ந்ததை அச்சிறுமி தனது அத்தைக்கு தெரிவித்ததையடுத்து, காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பூசாரியை கைது செய்வதற்காக அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பிரதி காவல்துறை மா அதிபரின் வேண்டுகோள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன, தவறான நம்பிக்கைகளைப் பின்பற்றி அப்பாவி சிறுமியின் வாழ்க்கை இருள் சூழ்ந்துள்ளதாகவும், இவ்வாறான மோசடியாளர்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு ஆண் ஒருவருடன் அறையில் சிறுமியை தனிமையில் விட்டுச் சென்றதன் மூலம் சிறுமியின் பெற்றோர் பாரிய தவறை இழைத்துள்ளதாகதெரிவித்த அவர், பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
