இலங்கைக்கு படையெடுக்கும் போர் கப்பல்கள்..!
இலங்கையை நோக்கி கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் மேற்குலக மற்றும் அண்டை நாடுகளில் இருந்து கடற்படை கப்பல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.
இந்நிலையில் இன்று, ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது.
இகாசுச்சி
ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் 150.5 மீற்றர் நீளமுள்ளதுடன் அது 207 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த கப்பலுக்கு கப்ரன் தனகா ஹிரோகி தலைமை தாங்குகின்றார். குறித்த கப்பலின் கப்ரன் சிறிலங்காவின் மேற்கு கடற்படை தளபதி ரியல் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் அதன் பணியாளர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளனர்.
அத்துடன் குறித்த கப்பல் நாளை இலங்கையை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
