நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் குறித்த விமான நிறுவனத்துக்கும் இடையில் எந்தவொரு மின்னஞ்சல் பரிமாற்றமும் இடம்பெறவில்லை என அவரது தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் சில தரப்பினர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களைத் திரிபுபடுத்தி சமூகமயப்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டினார்.
மின்னஞ்சல் பரிமாற்றங்கள்
கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள மின்னஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த விமான நிறுவனத்தின் சில உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அதில் நாமலின் தலையீடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் எவ்விதக் குறிப்பும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பில் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே சாட்சியம் நிமல் பெரேரா என்பவர் அரசாங்கத்திடம் வழங்கியுள்ள வாக்குமூலம் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், சாட்சியச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு குற்றத்தின் உடந்தையாளரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை குற்றவாளியாக்க முடியாது என்பது சட்டத்தை அறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம் எனவும் கூறியுள்ளார்.
நாமலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்காக பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய சட்டத்தரணி மனோஜ் கமகே, நாமல் சிறையில் அடைக்கப்பட்டாலும் பொதுஜன பெரமுனவையோ அல்லது மக்கள் எழுச்சியையோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.