அதிபர் மாளிகையில் பப்பாளி பழத்தை சாப்பிட்டவர்களும் கைதாவர் - பொன்சேகா கொதிப்பு (காணொலி)
போராட்டம் முடிவடையவில்லை
அடக்குமுறையை எதிர்கொண்டு போராட்டம் என்ற கருத்தாக்கம் வெளிப்பட்ட நிலையில் அடக்குமுறையால் தற்போது அடக்கப்பட்டாலும் போராட்டம் முடிவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு காலம் எடுக்கும் என்றும் பொன்சேகா கூறினார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சி
போராட்டக் குழந்தைகள் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சித்ததாகவும், நாட்டில் உள்ள அனைவரும் அந்த குழந்தைகளுக்கு இயன்றவரை உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிறுவர்களை பழிவாங்க வேண்டாம் என அதிபரிடம் தாம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவசரகால சட்டம் என்ற போர்வையில் சிறுவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பப்பாளி பழத்தை சாப்பிட்டவர்களும் கைதாவர்
அதிபர் மாளிகையில் இருந்து பப்பாளி பழத்தை சாப்பிட்ட சிறுவர்களும் இன்று கைது செய்யப்படுவார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்ஷக்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை அழித்ததாகவும், ஊழல் அரசியல்வாதிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீளக் கொண்டுவருவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
