தனிமைப்படுத்தலை கணக்கில் எடுக்கோம் -போராட்டங்கள் தொடரும் - தேரர் சூளுரை
பௌத்த புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்குவந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்சியிலும், தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டார்.
மிஹிந்தலை பிரதேசத்தில் மதவாச்சி வீதியில் அனுலாதேவியின் சின்னம் வைக்கப்பட்டுள்ள பெறுமதிவாய்ந்த தொல்பொருள் காணி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த இடம் முற்றாக இடிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரே இதற்கான உதவிகளை வழங்கியுள்ளார்.
கடந்த 02ஆம் திகதி இதுபற்றி மிஹிந்தலை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள போதிலும் அதனை ஸ்ரீலங்கா காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்காவில் பெண்கள் மத்தியில் முதலாவதான காவியுடையை அணிந்துகொண்ட அனுலாதேவி என்பவருடைய நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. முழு நாடும் பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில் ஸ்ரீலங்காவின் பௌத்த மக்களின் உரிமைகளாக உள்ள புனித நகரத்தில் ஒன்றாகிய மிஹிந்தலையிலுள்ள பெறுமதியான தொல்பொருள் பிரதேசம், சொத்து இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளமைக்குப் பின்னால் உள்ள அரச உயர்கரம் யாருடையது?
நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறாமலும் இந்தக் குற்றத்திற்காக எவரையும் கைது செய்ய முடியும் என்றாலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தின் உயரதிகாரி, இந்த முறைப்பாடுகளை செய்யவேண்டாம் என்றும், மாவட்ட காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெறும்படியும் அழுத்தம் வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் உயர்பீடத்தின் தொடர்பு இதனுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றே நாங்கள் சந்தேகிக்கின்றோம். பௌத்த உரிமைகளைக் கொண்ட தொல்பொருள் பிரதேசங்களைப் பாதுகாப்பதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவ்வாறு தான்தோன்றித்தனமாக செயற்படுவதை எதிர்த்து நாங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை கவனத்திற்கொள்ளாமல் போராட்டங்களை செய்யவுள்ளோம்”என அவர் தெரிவித்தார்.