ஊருக்கே செல்லப்பிள்ளையான காகம் -பின்னணியிலுள்ள சோகம்
செல்லப்பிராணியான காகம்
கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் காகத்தை செல்லப் பிராணியாக வளர்த்துவருவதுடன் ஊர் மக்களும் இந்த காகத்திடம் அன்போடு பழகி வருகின்றமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வினோத்தின் வீடு இருக்கும் பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்றன. இதற்கு இடையூறாக வினோத்தின் வீட்டின் முன் தென்னை மரம் ஒன்று இருந்துள்ளது. எனவே தென்னை மரத்தை வெட்டிச் சாய்த்தவேளை அதில் காக்கை கூடு இருந்தது வினோத்திற்கு தெரியவந்திருக்கிறது.
மரம் சாய்ந்து கீழே விழுந்ததில் அதில் இருந்த 3 காக்கை குஞ்சுகளில் இரண்டு பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு காக்கை குஞ்சு மட்டும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குற்ற உணர்ச்சி கொண்ட வினோத் அந்த காக குஞ்சை காப்பாற்றியதுடன் அதனை தொடர்ந்து வளர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார்.
சூட்டப்பட்டது பெயர்
தற்போது வினோத் நடத்திவரும் பேக்கரியில் ஜாலியாக வலம்வரும் அந்த காகத்திற்கு கேசி எனவும் பெயர்சூட்டியிருக்கிறார்.தினமும் கேசிக்கு பிஸ்கட், பழங்கள் மற்றும் இறைச்சிகளை கொடுத்து வருகிறார்.
மேலும், வினோத்தின் கடைக்கு வரும் பால் போடுபவர், பிஸ்கட் விற்பனையாளர் என அப்பகுதி மக்கள் பலரும் கேசியுடன் அன்புடன் பழகிவருகிறார்கள்.இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
