கிழக்கில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்
புதிய இணைப்பு
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அதில் மரணித்த மற்றும் காணாமல்போன உறவுகளுக்காக இன்று காலை 09.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தின் பலியான உறவுகளின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுனாமி பொது நினைவாலயத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் - குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் ஆலோசனைக்கமைய பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் டி.பிரதீப் தலைமையில் குச்சவெளி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சுனாமி அனர்த்தம் தொடர்பான விசேட உரையை குச்சவெளி பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் S.தட்சாயினி மற்றும் பேரழிவின் பாதிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி ஏ.ஆர்.பர்சூக் நிகழ்த்தினர்.
மூதூர்
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருட பூர்த்தியை முன்னிட்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - தக்வாநகர் பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலகம் ,திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது முதல் நிகழ்வாக சுனாமி அனர்த்தில் மூதூர் பிரதேசத்தில் உயிரிழந்த 286 நபர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுப் பெயர்பலகை திருகோணமலை மாவட்ட அரசாங்க சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 9.27 மணிக்கு 2 நிமிட மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.
முதலாம் இணைப்பு
இன்று காலை 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை (Srilanka) வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி (Tsunami) அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்ச்சிகள்
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டது.
இந்த பேரழிவில் 35000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்
அந்தவகையில் நாளைய தினம் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |