அநுர முன்னெடுத்த தவறான முடிவு! சபையில் கடுமையாக விமர்சித்த ஜீவன்
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பான இன்றைய சபை விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கான பெயரளவில் ஒரு திட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சாதகம்
உண்மையில் இது அபிவிருத்திக்கான வழியாக இல்லை. தோட்டப்புற மக்களுக்கு என காணப்பட்ட வீட்டுத்திட்டத்தை மாற்றியமைத்து மீண்டும் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் வீடு எனும் கருத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

அப்படியானால் தோட்டப்புறங்களில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக எதனை இந்த அரசாங்கம் வழங்கப் போகின்றீர்கள்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுப்பதவியில் இருப்பதாக கூறிக்கொள்ளும் சிறுவர் விவகார அமைச்சர் இதுவரையில் எந்த வித திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இது ஏனைய பகுதிகளுக்கு மக்களுக்கான வரவு செலவு திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மலையகத்தை பொருத்தவரையில் இது பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சாதகமான திட்டம் மாத்திரமே.
தற்போதைய ஜனாதிபதி 200ரூபா சம்பளத்தை மாத்திரம் வைத்து கருத்து தெரிவிக்கின்றார். சம்பளத்தை தாண்டி மலையகத்தில் வேறு எந்த பிரச்சினைகளும் இல்லையா?
எமது மக்களின் எதிர்பார்ப்பு என்பது காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதியினால் ஏதேனும் ஒரு வார்த்தையாவது பேசுவார் என்பது.
இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது இவ்வாறு இருக்க பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்த காலத்தை நீடிப்பது என்பது எந்த வகையில் நியாயமானது? மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல்வாதியேனும் இதனை நியாயப்படுத்த முடியுமா? இது ஒரு தவறான முடிவு” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |