இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா... உதய கம்மன்பில சந்தேகம்
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என்பதில் தனக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் செயற்படும் விதம் தனக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகத் தோற்றம்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன.

பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் இவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை. அத்துடன், உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் 'நலமா?' என வினவுகின்றார்.
செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?
வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலைக் குற்றம் புரிந்த செவ்வந்தி, காவல்துறையிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.
செவ்வந்தி தொடர்பான புகைப்படங்கள்
சாதாரணமாக ஒரு குற்றவாளியை மற்றுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். எனினும், செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படும் போது அவர் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.
இந்நிலையில், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செல்கின்றனர். முழு நாடே செவ்வந்தியின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார்.அவர் காவல்துறையிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறான நிலையில், செவ்வந்தி ஏன் நேபாளத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்