நாளை மறுதினம் மின் வெட்டு இல்லை: மின்சார சபை தகவல்
எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை (14) ஐந்து மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மின்சார நெருக்கடி தொடர்பில் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், டீசல் மற்றும் நாப்தாவைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக இயங்கவில்லை.
ஏற்கனவே கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், தேவையான எரிபொருள் இருப்புக்களை பெறுவதற்கு கப்பலை விடுவிப்பதற்கு தேவையான நிதியை அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நீர்மின் நிலையங்கள் ஊடாக 45% மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்குள் மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்வலயத்துடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் இலங்கையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மின்வெட்டு காலம் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மழை நீர், மினி ஹைட்ரோ மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் திறனை மேலும் அதிகரிக்கும் என்று ஜனக ரத்நாயக்க கூறினார்.
இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
