ஆட்சியாளர்களின் திட்டங்களை தோற்கடிப்போம்-தேரர் கடும் எச்சரிக்கை
எவருடைய அச்சுறுத்தல்களுக்கும் தான் ஒருபோதும் அச்சமடைய போவதில்லை எனவும், யாராவது தன்னிச்சையாக நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் மாற்ற முயற்சித்தால் மகா சங்கத்தினர் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனவும் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (16) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த அரசாங்ககம் நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க முயன்ற போது நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தினோம். அத்தோடு இந்த அரசின் வெற்றிக்காக நாங்கள் மிகவும் பாடுபட்டோம்.
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை.நாட்டின் ஒற்றுமையையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காகவே அவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம்.
கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சீன கிராமத்தை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.நாட்டை விற்பதற்கோ குத்தகைக்கு கொடுப்பதற்கோ அல்லது நாட்டுக்குப் பொருத்தமற்ற கொள்கைகளை உருவாக்குவதற்கோ மக்கள் இந்த அரசுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டங்களை முன்வைத்து நாட்டை நாசமாக்க முனைந்தால், இந்த ஆட்சியாளர்களை வெற்றியடையச் செய்ததைப் போன்றே அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்கவும் ஒன்றிணைந்து செயற்படுவோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
