கையெழுத்து வேட்டை ஊர்தி வழி போராட்டத்தில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) மல்லாவியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து 10.09.2022 அன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடைந்தத நிலையில் அங்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
நினைவேந்தலின் போது அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
இதேவேளை நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடைந்ததையடுத்து மல்லாவி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டினை தொடர்ந்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மல்லாவி நகரம் மாங்குளம் நகரம் ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிக்கும் பணி இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் மற்றும் முள்ளியவளை நகரங்களில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று நாளைய தினமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்வதோடு, திருகோணமலை நோக்கி செல்லவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


