தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு! கிழக்கிலும் ஆதரவு கோரிக்கை
தமிழர் பகுதியில் அரங்கேறும் அக்கிரமங்களை எதிர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர் பகுதியில் தொல்லியல் திணைக்களம் என்று சொல்லிக் கொண்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, வனவிலங்கு, வனஜீவராசிகள், மகாவலி என்றெல்லாம் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான விடயங்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது நீதிபதிகள் அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக அச்சுறுத்தப்படுகின்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது.
ஊடக சந்திப்பு
இதனை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைபெறவுள்ள இந்த பொது கடையடைப்புக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று (17) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம், மனித உரிமை, சட்ட ஆட்சி, நீதித்துறையின் கௌரவம் என்பவற்றையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்த கடையடைப்பினை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.