இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சபையில் நாமல் பகிரங்கம்
இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதுடன், நாட்டில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் நேற்றிரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடிப்படையாக வைத்து நாமல் ராஜபக்ச இன்று (19) நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் இந்த அரசாங்கம் தெரிவித்தது.
நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு
இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன. இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாகும். இதேபோல் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டிற்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும். நாட்டிலே முதலீடுகளை முன்னெடுத்த முதலீட்டாளர்களும் இடைநடுவே திட்டங்களைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு
இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று உள்ளதுடன் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பாதீட்டில் முன்வைத்த விடயங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்“ என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
