அநுர அரசை விமர்சிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் : சஜித் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அநுர (Anura) அரசாங்கம், தம்மை விமர்சிக்கும் மக்களை அச்சுறுத்தி, அவர்களது வாய்களை மூடச் செய்வதற்கு தமது பிரதேச மட்ட பிரதிநிதிகளைக் களமிறக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
களனி பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசாங்கம் எவ்வாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது.
முகநூல் பதிவு
மாத்தளை (Matale) மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், ஜே.வி.பியையும் சேர்ந்த ஒருவர், அவரின் வீட்டுக்கு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார்.
சொன்னதைச் செய்ய முடியாமல் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அச்சுறுத்துகிறார்கள். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.
அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் அடிப்படை உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காவல்நிலையத்தில் முன்னிலை
இதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவுகளை நீக்குமாறு யடவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இளைஞர் ஒருவர் யடவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
அதன்படி, இன்று (17) இரு தரப்பினரையும் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அந்த நபரின் வீட்டிற்கு வந்தபோது, அங்கிருந்த ஒருவர் இந்த சம்பவத்தை தமது தொலைபேசியில் பதிவு செய்திருந்த நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
