குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடித்தனம் - கைது செய்யப்பட்ட விவசாயிகள் : ரவிகரன் எம்பி விசனம்
குருந்தூர்மலைப் அடிவாரத்தில் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் அடிவாரத்தில் விவசாயத்தில் ஈடுபட்ட மூவர் நேற்று (11) முல்லைத்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல் திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுடன் துரைராசா ரவிகரன் கலந்துரையாடியுள்ளார்.
காவல்துறை பொறுப்பதிகாரி
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்குதியில் தமது வயல்காணிகளை பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட சாமித்தம்பி ஏகாம்பரம், சிறீரத்தினம் கஜரூபன், வரதன் இளமாறன் ஆகிய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்கல் இடப்பட்ட பகுதிகளுக்குள் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கைதுசெய்யப்படுள்ளனர்.
இந்தவிடயத்தினை அறிந்தவுடன் உடனடியாக முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு வருகை தந்து கைதுசெய்யப்பட்ட மூன்று பேருடனும் கலந்துரையாடியிருந்தேன்.
நீதிமன்றில் முன்னிலை
அத்தோடு காவல்துறை பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியதில் தமக்கு வவுனியாவில் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் தொல்லியல் திணைக்களத்தின் பகுதிக்குள் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபட்டதற்காகவே தம்மால் குறித்த மூவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
அத்தோடு இன்று (11) கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தக் காணிகள் அனைத்தும் அந்த மக்களுக்குரிய காணிகள் என்பதை காவல்துறை பொறுப்பதிகாரிக்குத் தெளிவுபடுத்தினேன்.
ஏற்கனவே மக்கள் பயிற்செய்கை மேற்கொண்ட காணிகளில், மக்களைத் தொடர்ந்து பயிற்செய்கை மேற்கொள்ளவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் சீர்கேடான செயற்பாடுகளே இங்கு இடம்பெற்று வருகின்றன என்பதையும் காவல்துறை பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தேன்.
இந்த விடயத்திலே தொல்லியல் திணைக்களமானது தமது எண்ணத்திற்கு ஏற்றவாறு எல்லைக்கற்களையிட்டு இக்காணிகளை அபகரித்து வைத்திருந்தால் மக்கள் எங்கே விவசாயம்செய்வது.
விவசாயக் காணி
மக்கள் தமது காணிகளுக்குள் சுதந்திரமாகச் சென்று பயிற்செய்கை செய்வதற்கான அவர்களது சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளே இந்த நாட்டில் தற்போது இடம்பெறுகின்றது.
குறிப்பாக தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் ஆகிய மூன்று இடங்களும் மீள்குடியேற்றம்செய்யப்படவில்லை.
இவ்வாறு எமது மக்களை மீள்குடியேற்றம்செய்யாமல், இந்த இடங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்ளப்போகின்றனரோ என்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு இருக்கின்றது.
இத்தகைய சூழலில் தமிழ்மக்கள் தமது பூர்வீக விவசாயக் காணிகளில் பயிற்செய்கை மேற்கொண்டு தமது வாழ்வாதரத்தை ஈட்டுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளில் வனவளத்திணைக்களம், வனஜீவராசிதிணைக்களம், தொல்லியல்திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச இயந்திரங்களால் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து பறித்துக்கொண்டிருக்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றுதான் நான் அரசாங்கத்தைக் கோருகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
