மாணவி அம்ஷிகா மரணத்தில் வெளியான அரசின் கோரமுகம் - வலுக்கும் கண்டனங்கள்
மாணவி அம்ஷிகா தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைத்தளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொருத்தமற்றது, இந்த கூற்றுக்கெதிராக நான் எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அனுஷா சந்திரசேகரன் (Anusha Chandrasekaran ) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி 16 வயதான ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எம் அனைவரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு தொடர்பு
குறித்த மாணவி ஒரு பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்று வந்த நிலையிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் அதனுடன் அந்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி பாடசாலைக்கு அறிவித்தும் கூட இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் குறித்த மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதாகவும் அறிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்வதற்கு முன்னராக குறித்த மாணவி அதிக மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல சூழ்நிலையிலேயே சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் தான் அனைத்து தரப்பினரது கண்களும் திறந்து இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி
இது தொடர்பில் மகளிர் அமைச்சரின் நாடாளுமன்ற உரையில் "சமூக வலைத்தளங்களினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற கூற்று எமக்கு வேதனையளிக்கிறது.
காரணம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாசகார அரசாங்கத்தின் ஆட்சியையே தலைகீழாக மாற்றிய பெருமை இந்த சமூக வலைத்தளங்களுக்கு உண்டு என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.
இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட இந்த சமூக வலைத்தளங்கள் அளப்பரிய பங்காற்றியது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கமாக, பொறுப்பு வாய்ந்த ஒரு மகளிர் விவகார அமைச்சராக, ஒரு பெண்ணாக இன்னுமோர் பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக எழுப்பபட்டிருக்க வேண்டிய குரல் மகளிர் அமைச்சரது குரலாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவரது கூற்று அது மக்களின் பக்கம் குற்றம் சாட்டும் முகமாக மாறியிருப்பது, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை சட்டை செய்யாத, பதவியிலிருந்தும் தனது இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை
பொதுமக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீதான வெறுப்பை அதிகரிப்பதாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.
எதிர்காலத்தில் இவ்வாறான துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழவே கூடாது என்பதற்காக இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அம்ஷிகாவுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காகவும், எம் சமூகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, என்னுடைய ஒத்துழைப்பு அனைத்து வழிகளிலும் இருக்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
