தமிழரசுக் கட்சிக்கு எதிராக இன்னும் மூன்று வழக்குகளா? தாங்குவாரா சிறிதரன்?
சனிப்பெயர்ச்சி.. குருப்பெயர்ச்சி.. ஏழரைச் சனி.. அஷ்டமத்துச் சனி.. இப்படி எல்லாக் கோதாரியும் தமிழரசுக் கட்சிக்குத்தான் போலிருக்கின்றது.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஏற்கனவே இரண்டு வழக்குகள் போடப்பட்டு, அந்த வழக்கில் இருந்து வெளியே வருவருவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைமை திக்குமுக்காடிக்கொண்டு நிற்கிற இந்த நேரத்தில், கட்சிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படப்போகின்றன என்ற வதந்தி கட்சி வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.
இந்த வழக்குகள் சிறிதரனுக்கு எதிராக சிறிதரனின் ஆதரவாளர்களலேயே தாக்கல்செய்யப்பட இருக்கின்றனவாம்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து கழண்டுகொள்வதற்காக சுமோ தயாரித்துக்கொடுத்த பட்டியலையே ஏற்பதென்று கடைசியில் சிறிதரன் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பரப்புரைகளை அவரது நெருங்கிய சகாக்கள் கிழக்கில் அரம்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, புதிய வழக்குகளை தாக்கல்செய்ய சில பொதுச்சபை உறுப்பினர்கள் முடிவுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
சுமோ தயாரித்த நிர்வாக உறுப்பினர் பட்டியலை தனது பதவிக்காக சிறிதரன்ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் வழக்குத்தாக்கல் செய்ய உள்ளதாக சிறிதரனுக்கு இதுவரை ஆதரவு அளித்துவந்தவர்களும், வடபகுதியைச் சேர்ந்தவர்களுமான அந்த மூவரும் ஆலோசித்துவருவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து இரண்டு பிரமுகர்களிடம் கருத்துக் கேட்டோம்:
‘பதவிக்காக மற்றவர்களைப் பலிகொடுப்பது ஒன்றும் தமிழரசுக் கட்சியில் புதுசு அல்ல… சிறிதரனை தலைவராக்கிவிட்டு அவரது காலை இறுக்கிப்பிடித்துக்கொண்டு நின்றால் அந்த மனுசனும் என்னதான் செய்வது? யாரையாவது பலிகொடுத்து முன்நகர்வதுதானே அரசியல்?’ என்று கூறினார் ஒரு பிரமுகர்.
‘முள்ளை முள்ளால் எடுக்கின்ற ஒரு செயலாகவும் இருக்கலாம். புதிய வழக்குகள் போடுவது என்பது நிச்சயமாக சிறிதரனின் இராஜதந்திர காய்நகர்த்தலாகத்தான் இருக்கும்..’ என்று கூறினார் இரண்டாவது பிரமுகர்.
குறிப்பு: கருத்துக் கூறிய இரண்டு பிரமுகர்களுமே சிறிதரன் ஆதரவாளர்களே!!