புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
அநுராதபுரம்(Anuradhapura) ரத்மலே திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர் உட்பட மூவரை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன்(North Central Provincial Education Director S.M.W. Samarakoon) தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாளை சமுக ஊடக குழுவில் பகிர்ந்த உதவி கண்காணிப்பாளர்
முதற்கட்ட விசாரணையில், உதவி கண்காணிப்பாளர் தேர்வின் முதல் வினாத்தாளின் புகைப்படங்களை, பரீட்சை தொடங்கும் முன், தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் சமூக ஊடகக் குழுவில் பகிர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதன்படி, குறித்த பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரின் சேவையை விரைவில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள்
மேலும், பகிரப்பட்ட வினாத்தாளைப் பெற்றதாகக் கூறப்படும் அநுராதபுரம் மற்றும் நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த பத்து ஆசிரியர்களும் தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற தரம் 5 பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சுமார் 100 பெற்றோர்கள் அநுராதபுரம் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் காவல்துறை அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பரீட்சை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |