காஸா மீது மும்முனைத் தாக்குதல் : இஸ்ரேலின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெருமளவானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், எதிர்காலத்தில் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக காஸா மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளமையானது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 2,200க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதலை அடுத்து ஆரம்பமான போர் இன்று (15) 9வது நாளாக தொடர்கிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு காசா மக்கள் தொடர்ந்து தெற்கு காசாவிற்கு தப்பிச் செல்கின்றனர். அதாவது அங்கு வசிக்கும் 1.1 மில்லியன் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிருக்கு தப்பியோடிய மக்கள் குழுவை ஏற்றிச் சென்ற டிரக் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மக்கள் வெளியேறும் காலக்கெடு புதுப்பிப்பு
மக்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை புதுப்பித்துள்ள இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர், எதிர்வரும் காலங்களில் அப்பகுதியில் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். இந்த சம்பவம் விபத்தாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வடக்கு காசாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான பணி என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், நோயாளிகளுக்கான மரண தண்டனையுடன் இதை ஒப்பிடலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அமைப்பின் படி, வடக்கு காசாவில் உள்ள 22 மருத்துவமனைகளில் சுமார் 2000 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்முனைத் தாக்குதல்
இதனிடையே தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக காசா பகுதி மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த தாக்குதல்களுக்கான குறிப்பிட்ட காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் அடுத்த திட்டம் வடக்கு காசா பகுதியை புதிய உயர் பாதுகாப்பு வலயமாக நியமிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதிக்கு அருகில் உள்ள கர் ஆசா என்ற இஸ்ரேலிய கொலனிக்கு சென்று அங்கு இராணுவ வீரர்களை சந்தித்தார்.
ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஒரு வருட தாக்குதலுக்கு சமம்
இதேவேளை, கடந்த வாரத்தில் காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் எண்ணிக்கை 6,000ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு வருடத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களின் எண்ணிக்கைக்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது. ஒரு வாரத்தில் அதன் மீது இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.