பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான யாழ் இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் (01) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்து பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் பகுதியை சேர்ந்த சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, இணுவில் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கயந்தரூபன் (37) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தின நிகழ்வு
அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மற்றொருவர் நேற்று கைது செய்யப் பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் பேஸ்புக் கணக்குக்கு உரித்துடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முகநூல் ஒன்றினூடாக வெளியிடப்பட்டமை.
மற்றும் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தின கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நினைவேந்தல் தினம் என்று வெளிப்படுத்தி, முகநூல் வழியாக வதந்திகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அரசு உடன் கைது செய்ய வேண்டும்
இதேவேளை வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும்இ பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பினர்களை நினைவேந்த அனுமதி வழங்குவதா, தமிழ் மக்களுக்கு அநுர அரசு செய்யும் நன்றிக் கடன்? தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |