படகில் வந்த புலிகள்
வடக்குகிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபை தொடர்பான இடம்பெற்றுவந்த சர்ச்சைகளுக்கு புலிகள் ஒரு முற்றுப் புள்ளியை வைத்ததைத் தொடர்ந்து, இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் காணப்பட்டு வந்த விரிசல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.
இந்த விரிசல்களை மேலும் அதிகரிப்பதுபோன்ற மற்றொரு சம்பவம், 03.10.1087 அன்று பாக்கு நீரினை கடற்பரப்பில் இடம்பெற்றது.
இந்தியா மீது முற்றாகவே நம்பிக்கையை இழந்திருந்த விடுதலைப் புலிகள் புலிகளை அடிமைப்படுத்த அல்லது அழித்துவிடத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த இந்தியா இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்த சிறிலங்கா இந்த மூன்று தரப்பினருமே எதிர்பார்த்திராத நிகழ்வொன்று அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம்பெற்றது.
ஒரு மோசமான இன அழிப்பை மேற்கொண்ட படையினர் என்று இந்தியாவை சர்வதேசத்தின் முன்னர் தலைகுனிய வைக்கும்படியாக அமைந்திருந்த புலிகள்-இந்திய யுத்தத்திற்கு அத்திவாரம் போட்டதாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்த நிகழ்வு, ஜே.ஆருக்கு மட்டுமே நன்மை பயக்கும்படியாக அமைந்திருந்தது.
படகில் வந்த புலிகள்
3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் சில விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் படகொன்றில் வந்துகொண்டிருப்பதாக இந்திய அமைதிப்படைக்கு, இந்தியக் கடற்படையினரிடம் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.
புலிகள் தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்ததுடன், புலிகளின் ஆயுதங்களைக் களையும் நோக்கத்திலும் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர், இந்தத் தகவலை சிறிலங்கா கடற்படையினரின் காதுகளில் போட்டு வைத்தார்கள்.
உடனடியாகவே சிறிலங்கா கடற்படையின் ரோந்துக் கப்பல் ஒன்று புலிகளின் படகை வழிமறிக்கப் புறப்பட்டது. அக்காலத்தில் புலிகள் கடல் புலிகள் என்ற பிரமாண்டமான கடற்படைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.
ஈழத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான போக்குவரத்திற்கும், ஆயுத மற்றும் உணவு விநியோகத்திற்கும் என்று சிறிய அளவிலான கடற் பிரிவொன்றையே கட்டமைத்திருந்தார்கள்.
கடல் புறா என்ற பெயரில் சில வள்ளங்களில், உயர் வலு இயந்திரங்களையும், எல்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகளையும் பொருத்தி, சிறிய படைப்பிரிவொன்றையே கொண்டிருந்தார்கள்.
(பிரபல சரித்திர எழுத்தாளர் சாண்டில்யன் எழுதியிருந்த கடல் புறா என்ற சரித்திர நாவலில், தமிழருக்குச் சொந்தமான பாரிய கடற்படையின், பிரதான கப்பலுக்கே கடல் புறா என்று பெயரிடப்பட்டிருந்தது.
சாண்டில்யனின் அந்த நாவலை மிகவும் விரும்பிப் படித்த புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலிகளின் கடற் பிரிவுக்கு, ‘கடல் புறா என்ற பெயரைச் சூட்டியிருந்தார்) ‘கடல் புறா என்று பெயர் பொறிக்கப்பட்ட புலிகளின் அந்தப் படகை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்தார்கள்.
புலிகளின் படகில், மட்டக்களப்பு மாவட்ட தளபதி குமரப்பா மற்றும் திருகோணமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் உட்பட 17 போராளிகள் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
ஆரியதாச என்ற அதிகாரியின் தலைமையில் சென்ற சிறிலங்கா கடற்படைப் படகு, புலிகளின் படகை வழிமறித்தது.
புலிகளின் படகை கரையை நோக்கித் திருப்பும்படி கட்டளையிட்டது. புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றே கடற்படையினர் எதிர்பார்த்திருந்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
ஆனால் புலிகள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருந்த காரணத்தினாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவும், புலிகள் தாக்குதல் முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை.
சிறிலங்காப் படையினரின் கட்டளைக்குப் பணிந்து நடந்துகொண்டார்கள். படகில் இருந்து 17 புலி உறுப்பினர்களும், காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
புலிகள் தமது பாதுகாப்பிற்கென்று கொண்டு சென்ற சில துப்பாக்கிகளையும், படகில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளையும் தவிர, படகில் வேறு ஆயுதங்கள் எதுவும் கடத்திச் செல்லப்படவில்லை.
எனவே பாரதூரமாக எதுவும் நடைபெறமாட்டாது என்ற நம்பிக்கையில்தான் புலிகள் சிறிலங்காப் படையினருடன் புறப்பட முடிவுசெய்தார்கள்.
அத்தோடு, காங்கேசன்துறை தளத்தில் இந்தியப்படையினரும் நிலைகொண்டிருந்ததால், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எதுவும் நடைபெறச் சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
புலிகளை அழைத்துச் சென்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியான ஆரியதாசவும், புலிகளுடன் மிகவும் நட்புடன்தான் நடந்துகொண்டார்.
காங்கேசன்துறை தளத்தில் புலிகள் தரையிறங்கியபோது, அங்கிருந்த ஒரு இராணுவவீரன் புலேந்திரனை அடையாளம் காணும்வரை நிலமை சுமுகமாகவே இருந்தது.
புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட தளபதி புலேந்திரன், சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர். சிறிது காலத்தின் முன்னர் பரனை பிரதேசத்தில் உள்ள கித்துலொட்டுவ என்ற இடத்தில், இரண்டு பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்த 126 சிங்கள மக்கள் ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு புலிகளே காரணம் என்று சிறிலங்கா அரசு கூறியிருந்ததுடன், திருகோணமலைப் பிரதேசப் பொறுப்பாளர் புலேந்திரன் தலைமையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புலேந்திரன் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பயத்துடனேயே நோக்கப்பட்டுவந்தார்.
காங்கேசந்துறை துறைமுகத்தில் சிறிலங்காப் படையினரால் அழைத்துவரப்பட்ட 17 விடுதலைப் புலிகள் மத்தியில் புலேந்திரனும் இருந்ததை, ஒரு சிங்களச் சிப்பாய் அடையாளம் கண்டுவிட்டார். அதன் பின்னரே, தாங்கள் கரைக்கு அழைத்துவந்த நபர்களின் பெறுமதியை சிறிலங்கா கடற்படையினர் உணர்ந்து கொண்டார்கள்.
கைது உத்தரவு
செய்தி கொழும்புக்குப் பறந்தது. கொழும்பில் இருந்து கடற்படையினருக்கு ஒரு உத்தரவு வந்தது.
உடனடியாக படகில் வந்த 17 பேரையும் கைது செய்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வந்தது.
படகில் வந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். சிறிலங்கா இராணுவத்தின் வடபிராந்திய துணைக் கமாண்டர் பிரிகேடியர் ஜயரட்னா (பின்னாளில் இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, 1988 ஒக்டோபரில் மரணம் அடைந்தார்) புலி உறுப்பினர்கள் 17 பேரையும் தனது பொறுப்பில் கொண்டு வந்தார்.
புலிகள் உட்பட ஈழப் போராளிகள் அனைவருக்கும் சிறிலங்கா அரசினால் ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததால், தாம் கைது செய்யப்பட்டதையோ, அல்லது தம்வசமிருந்த ஆயுதங்கள், சயனைட் குப்பிகள் என்பவை பறிமுதல் செய்யப்பட்டதையோ புலிகள் ஆட்சேபிக்கவில்லை.
தாங்கள் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், புலிகள் முரண்டுபிடிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான உத்தரவு, பிரிகேடியர் ஜயரெட்னாவிற்கு வந்தது. ‘கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை உடனடியாகவே கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர்களைக் கொழும்புக்கு கொண்டு வருவதற்கு ஒரு விஷேட விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் வரலாற்றிலும், ஈழத்தமிழர் வரலாற்றிலும் ஒரு பாரிய அனர்த்தம் இடம்பெற இருப்பதைக் கட்டியம் கூறுவது போன்று அந்த செய்தி அமைந்திருந்தது.
‘இந்தியாவின் வியட்னாம் என்று சரித்திரத்தில் குருதியினால் பொறிக்கப்பட்டுள்ள, புலிகளுடனான இந்தியாவின் யுத்தத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவம், ஜே.ஆரின் விருப்பப்படியே நடைபெற்றது.
இந்த சம்பவம் பற்றி பின்நாட்களில் ஜே.ஆர். ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் போடவேண்டிய குஸ்தி சண்டையை தான் போடுவதற்காக மத்தியஸ்தரான ராஜீவ் காந்தி கோதாவில் குதித்திருந்தார்” என்று கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.
புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால விரோதத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவத்தின் சுவையான, பரபரப்பான விடயங்களை அடுத்தவாரம் பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
