யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ஜுலி சங் எதிர்க்கவில்லை என்கிறார் டிரான் அலஸ்!
இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோரவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளியாகிய செய்திகளை தொடர்ந்து, தான் ஜுலி சங்கிடம் தனிப்பட்ட ரீதியில் வினவியதாகவும், அதனை அவர் நிராகரித்ததாகவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்புகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த அறிக்கைகளை தான் பொருட்படுத்த போவதுமில்லை, அதற்கு பதிலளிக்க போவதுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் விநியோகஸ்த்தர்கள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பதாகவும் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை
இதற்கமைய, யுக்திய நடவடிக்கைக்கு எதிராக செயற்படும் நபர்களின் பெயர் விபரத்தை வெகு விரைவில் பகிரங்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடக காட்சிப்படுத்தலுக்காக யுக்திய என்ற விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்புக்கு எதிராக மக்கள் போராடவில்லை எனவும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, யுக்திய செயற்திட்டத்தினால் இலங்கையில் தற்போது 17 வீதமளவில் சமூக விரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |