நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்!
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயல்படும் மற்றும் இனவாதக் கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தான் ஒரு இனவாதி அல்ல என கூறியுள்ளார்.
பௌத்தத்தை பாதுகாப்பதற்காக தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இனத்துவம் என வரையறுக்கப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் நாட்டையும் தான் ஒரே விதத்தில் நேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம்:இனத்துவம்
இனவாதம், மதவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தற்போது பலர் ஒரு கலாச்சாரமாக பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதன் அர்த்தங்களை சரிவர புரிந்து கொள்ளாது பலர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் மற்றும் இனத்துவம் என்பது இரு வேறு விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு இனம் மாத்திரம் சிறந்ததென போராடுவது இனவாதம் எனவும் ஒரு இனத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இனத்துவம் எனவும் சரத் வீரசேகர விளக்கியுள்ளார்.
பௌத்த மதம்
இதற்கமைய, தனது இனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை எதிர்த்து குரல் கொடுப்பது இனவாதமாக கருத முடியாதென அவர் கூறியுள்ளார்.
பௌத்த மதத்துக்கு சிக்கல்களோ அச்சுறுத்தல்களோ ஏற்பட்டால், அதனை தான் நிச்சயமாக தட்டி கேட்பேன் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம்
அத்துடன், பயங்கரவாதம் எனும் விடயம் புறக்கணிக்கப்பட வேண்டுமெனவும், ஒரு நாட்டில் அமைதியை பேண இது அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை தான் சகோதரர்களாக கருதுவதாகவும் தன்னை இனவாதி என குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்துவதில்லை எனவும் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதி யுத்தம்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, 2 இலட்சத்து 95 ஆயிரம் பேரை அப்போதைய அரசாங்கம் காப்பாற்றியதோடு, அவர்களை ஆறு மாதத்தில் மீண்டும் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்காக தான் உள்ளிட்ட அரசாங்கத்தினர் பல சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கியதாகவும், இதன் போது தமிழ் அரசியல்வாதிகள் அமைதி காத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை என சரத் வீரசேகர கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த நாடு
இலங்கையில் அதிகளவான சிங்கள பௌத்த மக்கள் இருப்பதன் காரணமாக ஒரு சிங்கள பௌத்த நாடு என கூறுவதில் எந்தவொரு தவறும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் மக்களை புறக்கணிக்கும் வகையில் தான் சிங்கள பௌத்த நாடு தொடர்பான கருத்துக்களை முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |