தத்தளிக்கும் தமிழரசுக் கட்சி - மாவைக்கு பலத்த அடி! வெளியேறும் முடிவில் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சி எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமான முடிவுகளை கூட காப்பாற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதியின் இராஜினாமா விவகாரம் தொடர்பாக பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
எரிக் சொல்ஹெய்மோடு பேசியது என்ன?
வெளியேறும் முடிவில் சுமந்திரன்
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “கட்சி சரியாக செயற்றிறனோடு இல்லாது விட்டால் மக்கள் கட்சியை நிராகரிப்பார்கள். ஆகையினாலே கட்சிக்குள்ளே இருக்கின்ற நாம், அந்த நிர்வாகத்திறன் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என போராடுவோம்.
இல்லை என்றால், பரஞ்சோதியை போலவே நாங்களும் வெளியேற வேண்டிய நிலை தான் வரும்.
நான் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்குள் வந்தவன் அல்ல. இந்தக் கட்சி தான் என்னைக் கேட்டு கட்சியினுடைய குறிக்கோள்களை அடைவதற்கு உதவுவதற்கு என்னிடத்தில் சில ஆற்றல் இருப்பதாக நம்பி அதனைச் செயற்படுத்த அழைத்தது.
ஆகையினாலே கட்சியை விட்டு கட்சி தாவுவதோ? இன்னும் ஒரு கட்சியை உருவாக்கி தொடர்ந்து அரசியலில் இருப்பதோ? என்னுடைய நோக்கம் அல்ல” என்றார்.
பரஞ்சோதியின் இராஜினாமா விவகாரம்
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதுள்ள கோப்பாய் பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையினை செயற்படுத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டார்.
இதன் அடிப்படையிலும், கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் தலைவர் காணப்படுகின்றார் என்பதன் அடிப்படையிலும் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.