சம்பந்தனின் ஆதரவு ரணில் அரசுக்கு தேவையில்லை! ஆளும் தரப்பு சூளுரை
சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
'வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்' - என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.
சம்பந்தனின் ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில், 'ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.
அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |