மயிலத்தமடு விவகாரம்: 100வது நாளில் வலுத்த போராட்டம்(படங்கள்)
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டம் இன்றுடன் 100 நாட்களாகியுள்ளதால் அவர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக குறித்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கோரிக்கை முன்வைப்பு
இதன்போது மட்டக்களப்பு மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி அவற்றில் கால்நடை வளர்ப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது
மேலும், மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், கால்நடைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், காவல்துறையினரின் செயற்பாடுகள் மற்றும் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் மகஜர் தயாரிக்கப்பட்டு அங்கு கடமையிலுள்ள காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.
போராட்டத்தின் போது ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பண்ணையாளர்களின் அவலநிலை
அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் சில சிங்கள இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.
அதேவேளை, பொறி வைத்து பிடித்து கால்நடைகளை வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அறவழிப்போராட்டம்
அத்துடன் மேய்ச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன.
இவ்வாறான சூழலிலேயே, மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தரக் கோரி கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குதித்தனர்.
பண்ணையாளர்கள் கொட்டும் மழையிலும், தங்களது வாழ்விடங்களையும் கால்நடைகளை இழந்தும் இந்த அறவழிப் போராட்டத்தை 100 நாட்களாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |