அனுர அரசிற்கு எதிராக இன்று பல தொழிற்சங்கங்கள் போராட்டம்
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று (23) தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி இந்த போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு
அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்பு ஆடை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளதாக அதிபர் தரத்திலான அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிமல் முதன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தைப் புறக்கணித்து செயற்படுவதே இத்தகைய பிரச்சினைகளுக்குக் காரணம் என அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதேனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கோ எவ்வித தீர்வும் வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித கன்னங்கர தெரிவித்துள்ளார்.
மேலும், அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோர், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |