உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் : வெளியான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
புதிய இணைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூடிய போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்றைய நாளுக்கான (14.02.2025) நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய அமர்வின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் (Rizvie Salih) தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற விசேட அமர்வை இன்று காலை 9.30க்கு கூட்டத் தீர்மானிக்கப்பட்டது.
பிரதமரின் கோரிக்கை
அதன்படி, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
அத்துடன், இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவை இன்றைய தினம் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணிவரை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)