தமிழ் நாட்டை மீண்டும் உலுக்கப்போகும் கனமழை! வெள்ளம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உலுக்கிய வெள்ள பாதிப்புக்களில் இருந்து மக்கள் மீள்வதற்குள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றமை மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடிக்கான உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தமிழ் நாட்டில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.
கனமழை பாதிப்புக்கள்
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதல் பெய்துவரும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு விரைந்துள்ளன.
அத்துடன் கனமழை பாதிப்புக்கள் குறித்து அறிவிக்க திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகள் விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வரத்து காணப்படுவதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கப்பட்டுள்ளதுடன், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமான சேவைகளும் மீளெடுக்கப்பட்டுள்ளன.
கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |