மக்களே அவதானம் - அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியான எச்சரிக்கை
புதிய இணைப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயணம் செய்ய வேண்டாம்
வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
முன்னெச்சரிக்கை
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த இரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் (14) நாளையும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு (colombo) கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |