புடினுக்கு ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை : உக்ரைனுக்கு செல்லப்போகும் அதிநவீன ஆயுதம்
உக்ரைனுடான போரை ரஷ்யா விரைவில் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைன் நீண்டகாலமாக கோரி வரும் டாமஹாக் ரக ஏவுகணைகளை அந்த நாட்டுக்கு தாங்கள் அளிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளாா்.
காஸா போா் நிறுத்தம் தொடா்பாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக அந்த நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தனது ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி அவா் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது,
போரில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய ஆயுதம்
உக்ரைனுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள, ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போரில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய ஆயுதம் ஒன்றை உக்ரைனுக்கு அளிக்கும் விவகாரத்தை கையிலெடுப்பேன்.
‘போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவாருங்கள். இல்லையென்றால் நான் உக்ரைனுக்கு டாமஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன்’ என்று புடினிடம் நான் எச்சரிப்பேன்.
டாமஹாக் ஒரு அற்புதமான ஆயுதம்
டாமஹாக் ஒரு அற்புதமான ஆயுதம். அதற்கு தாக்குதல் திறன் மிகவும் அதிகம். அந்த ஆயுதம் உக்ரைன் கைகளுக்குச் சோ்வதை ரஷ்யா ஒருபோதும் விரும்பாது.
அந்த ஆயுதத்தை நாங்கள் உக்ரைனுக்கு அனுப்பலாம்; அனுப்பாமல் கூட போகலாம். ஆனால், அந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு டாமஹாக் ஏவுகணை விவகாரம் முதல் படியாக இருக்கும் என்றாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
