ஈழப் போரில் சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து மாத்திரம் சிறிலங்கா ஏன் பேசுவதில்லை!
ஏதுவுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன் ? அவர்களின் வாழ்வை பறிப்பது ஏன் ? அவர்களின் நிலத்தை பறிப்பது ஏன் ? அவர்களின் தாய் தந்தையரை கொன்றும் காணாமல் போகச் செய்தும் சிறையில் அடைத்தும் அனாதைகளாக்கியது ஏன் ? குழந்தைகளை, சிறுவர்களை பழிவாங்கும் குறி வைக்கும் ஒரு நாட்டில் சிறுவர் உரிமையும் மனித உரிமையும் எந்த விசித்திரத்தில் இருக்கின்றது ? உலகப் போரில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசும் சிறிலங்கா அரசு ஈழப் போரில் நிகழ்ந்த அநீதி குறித்து மாத்திரம் பேசுவதில்லை.
ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்பட்டார்கள். ஈழத்தில் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு தாய் தந்தைக்காகப் போராடுகிறார்கள்.
குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதையெல்லாம் ஈழ நிலத்தில் எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
🛑 உலக சிறுவர் தினம்
அக்டோபர் முதலாம் திகதி “உலக சிறுவர் தினம்” சர்வதேச ரீதியாக கொண்டாடப்படும் நிலையில், இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பான தேசிய நிகழ்ச்சிகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலிலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலக சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான சிறுவர் தினத்தை முன்னிட்டு 2025 செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் முதலாம் திகதி வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
🛑மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் கருத்து
சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகப் போரின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
சிறுவர் உடை அலங்காரம் இதன்போது சிறுவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கென்று உரிமைகள் இருத்தல் வேண்டும் என தீர்மானித்தது. இதனால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் (CRC) ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையும் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் வாதிட்டு வந்தது.
சிறுவர் உடை அலங்காரம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுவர்களுக்கு என்று பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறுவர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது…” என்றும் அவர் கூறியுள்ளார்.
🛑 ஈழ குழந்தைகளின் நிலை
ஈழ நிலத்தின் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது.
எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள அரசு படைகளின் குண்டுகளால், விமானங்களால் பிய்த்தெறியப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அப்பாவிக் குழந்தைகளை சிங்கள இராணுவம் கொலை செய்து அழித்தது.
அவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இரத்தம் அவர்களின் கண்ணீர் இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை. ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய போரால் எங்கள் குழந்தைகள் இடர்மிக்க காலத்தை சந்தித்துள்ளனர். இன்றைக்கு எங்கள் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிலவற்றுக்குச் செல்கிறபோது எத்தனை தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை சந்திக்க முடிகிறது. தாய் தந்தையர்களை குழந்தைகள் இழப்போடு அவர்கள் மாபெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பேரன்பை இழக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் வேறு ஒரு திசையில் செல்கிறது. இட்டு நிரப்ப முடியாத அந்த இடைவெளி அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
🛑 ஈழ போரில் சிறுவர்கள்
ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போரில் சரணடைந்த ஐம்பது சிறுவர்கள் குறித்து ஸ்ரீலங்கா அரசும் இராணுவப் படைகளும் இன்றுவரையில் வாய் திறக்காமல் இருக்கின்றன. சிறுவர்கள் குறித்து அதிகம் பேசுகின்ற உலக நிறுவனங்கள், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் குறித்தெல்லாம் பேசுகின்ற அமைப்புக்களும் கூட இந்த விடயத்தில் சிறிலங்கா அரசு மீது கேள்வி எழுப்பாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வேதனை.
இங்குதான் சிறிலங்கா அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் சிறுவர் தினம் குறித்த பிரகடனங்கள் கேள்விக்கு உள்ளாகின்றன. அத்துடன் போரில் சிறுவர்கள் மற்றும் இளையவர்கள் என பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது? இந்த விடயத்தில் நீதிக்காகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து வடக்கு கிழக்கு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெருக்களிலும் அரச நிறுவனங்களின் முன்பாகவும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன இப்போது ரணில் விக்கிரமசிங்க, இப்போது அநுரகுமார திசாநாயக்க எனப் பலர் ஆட்சிக் கதிரை மாறிய போதும் இந்த மக்களுக்கு பதில் வழங்கப்படாத துயர நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.
🛑 சிறுவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்கள்
போரினாலும் சமூக அவலங்களாலும் சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அந்நிலையங்கள் அவர்களுக்கு சிறைக் கூடங்களாகின்றன. பெற்றோர் தரும் அரவணைப்பை சகோதரர்கள் கூடியிருக்கும் வாழ்வை யாரால் தர இயலும் ?
அந்த வாழ்வில் இருக்கும் ஆறுதலை இனிமையை எப்படித் தர இயலும். வாடிய முகங்களுடன் ஏக்கங்கள் நிறைந்த மனத்தோடு பிஞ்சு வயதிலேயே மன நெருக்கடிகள் நிறைந்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு எங்கள் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறுவர் இல்லங்கள் என்றில்லாமல் சிறுவர் இல்லங்களுக்கான குழந்தைகளாக அவர்களின் சூழல் அமைக்கப்பட்டிருக்கின்றது.
தய்தையை இழந்து, தாயை இழந்து அன்பும் ஆதரவுமற்று அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் பல இடங்களில் தொழிலாளிகளாக நடத்தப்படுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலிருந்து வணிக நிறுவனங்கள் வரை வடக்கில் தொழிலாளிகளாக குழந்தைகள் நடத்தப்படுவதைக் காணலாம். தாய் இறந்துபோக தந்தையார் செய்து கொண்ட மறுமணத்தின் ஊடாக கிடைத்த மாற்றுத் தாயே பாடசாலையை இடைவிலக்கி குழந்தைகளை தொழிலாளிகள் போல நடத்துவதையும் காணமுடிகிறது. இவ்வாறு குழந்தைகள் குடும்பங்களில், வீடுகளில் முகம்கொடுக்கும் சிக்கல்கள் ஏராளம்.
🛑 ஈழச் சிறுவர்களின் உரிமைகள்
ஈழச் சிறுவர்களின் பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் தாய் தந்தையர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டு அவர்களின் தந்தையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்கள் அனாதரவாக்கப்பட்டு அவர்கள் பாடசாலை கல்வியை இழந்து இராணுவ ஆக்கிரமிப்பும் அபாயமும் மிகுந்த சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளமை எதற்காக ?
இப்படி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் சிறுவர்களுக்கு இந்த மண்ணில் என்ன உரிமை இருக்கின்றது ?
சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எங்கள் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எல்லாமும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள் இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை குறித்து இந்த உலகின் முன் நீதியை கோரி முகத்தில் அறைகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 30 September, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
