உயிராற்றலால் தேசத்தை வரைந்த ஈழப் பெண்கள்… இன்று தமிழர் தேச பெண்கள் எழுச்சி நாள்…
பெண்ணின் சக்தியாலும் வலிமையும் பெருமையும் பெற்றது ஈழப் போராட்டம். பூமியை பெண் என்கிறோம். நிலத்தை பெண் என்கிறோம். கடலைப் பெண் என்கிறோம். இந்த உலகின் அற்புதங்கள் எல்லாமே பெண்ணாகத்தான் இருக்கின்றது.
உலகின் எல்லா சமூகங்களிலும் பெண்தான் முக்கிய அடையாளம்.மொழி தாய் வழியாகத்தான் கடத்தப்படுகிறது. அதனால்தான் எல்லோரும் தமது மொழியை தாய் மொழி என்கிறார்கள். எல்லாவற்றின் ஊற்றாகவும் சிருஷ்டிப்பு கர்த்தாகவும் பெண் இருப்பதனால்தான் இன அழிப்பாளர்கள் பெண்களை இலக்கு வைக்கிறார்கள்.
ஈழத்தில் பெண்கள் மனதால் மாத்திரமின்றி உடல் வலிமையாலும் சாதித்தவர்கள். இலக்கியங்களால் மாத்திரமின்றி இலட்சியங்களாலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை நிமிரச் செய்தவர்கள் ஈழப் பெண் போராளிகள். அதன் பெருமையை உணர்த்துகின்ற நாளே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்.
பெண் போராளிகள்
உலகில் பெண்களை படையில் கொண்ட ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பியவர்கள் ஈழத்தவர்கள். உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்களில், பெண்களுக்கு பெரும் முக்கியத்துவத்தை கொடுத்த போராட்டமாக ஈழ விடுதலைப் போராட்டம் மதிக்கப்படுகிறது. போர்க்களம், அரசியல் களம் என அனைத்திலும் தமிழீழப் பெண்கள் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தினர். மருத்துவத்துறை, கணினித்துறை, கமராத்துறை என அனைத்திலும் தமிழீழப் பெண் போராளிகள் தங்கள் தடத்தை பதித்தனர்.
இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்தார். பெண் வலிமையானவள், அவளே ஒரு சமூகத்தை உருவாக்குகிறாள் என்பதை நன்கு புரிந்து கொண்ட தலைவர் பிரபாகரன், உலகே திரும்பிபார்க்கும் அளவிற்கு ஈழப் பெண்களின் வல்லமைகளை எடுத்துக் காட்டினார்.
முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி, முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி, மேஜர் சோதியா, கப்டன் வானதி, அன்னை பூபதி என்று தம் உயிராற்றலால் தேசத்தை வரைந்நதவர்கள் ஈழப் பெண்கள். இப்படியாக வீடுகளுக்குள் அடுப்படிக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், பெரும் சரித்திர நாயகர்களாகியது ஈழத்தில்தான். முழுக்க முழுக்க ஆண் மைய உலகமாக மாறியுள்ள இன்றைய உலகத்தில் ஈழத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் பெற்ற முக்கியத்துவம் என்பது வியப்பூட்டுவதாக ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
சிறிலங்கா இராணுவத்தில் பெண்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட சிங்கள இராணுவத்தின் பெண்கள் இராணுவப் பிரிவுகூட தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திப் பேசியதை ஊடகங்களில் கண்டிருக்கிறோம்.
சிறிலங்கா இராணுவத்தில் பெண்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் போர்க்களங்களுக்கு வெளியில் சோதனைச் சாவடிகளில் தமிழ் மக்களின் உடுப்புப் பைகளை கிளறி சோதனை செய்கின்ற பணிக்கு மாத்திரம் தான் விடப்படுகின்றனர். பின்களத்தில் எடுபிடி வேலைகளில்தான் ஈடுபடுகின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆண் தளபதிகளுக்கு நிகரான பெண் தளபதிகளும், அரசியல் போராளி ஆளுமைகளாக பெண் போராளிகளும் பொறுப்பாளர்களும் ஈழச் சமூகத்தையே வழிநடத்தினார்கள். அது பெருமையும் உவகையும் தருகின்ற நினைவுகள்தான்.
ஆனால் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்றாண்டுகள் ஆகின்றன. இன்றைய ஈழத்தின் நிலமைகள் தலைகீழாக மாறிவிட்டன. இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தென்ன? இன்றே விடுதலைப் புலிகள் கால பெண் வளர்ச்சி என்பது மலைப்பை தருகின்ற வியப்பை தருகின்ற ஒன்றாகத்தான் இருக்கிறது.
இன்றைய ஈழம் என்பது பெண்களை இலக்கு வைத்து இனவழிப்பு முன்னெடுக்கின்ற நிலத்தின் சூழல்களால் தான் சூழ்ந்திருக்கிறது. போரினால் பெண்கள் அடைந்த இழப்புக்களும் வலிகளும் நம் சமூகத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது.
போரில் கணவனை இழந்த பெண்கள் நீதிக்காக களமாடுகின்றனர். சிறையில் உள்ள கணவனுக்காகவும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தன் துணைக்காகவும் போராடுகிற பெண்களும் பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் போராடுகிற பெண்களுமாய் இருக்கிறது எங்கள் நிலம்.
போரில் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் பெண்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. மனித குலம் அஞ்சும் குற்றங்களை இழைத்த படைகள் சூழ்ந்திருக்க பெண் சிறுமிகளை தாங்கியிருக்கிறது நம் நிலம். பல வித்திலும் பெண்களை சிதைக்கும் அழிக்கும் கீழ் தள்ளும் சூழால் ஆக்கபட்டுள்ளது ஈழ தேசம்.
மாலதி என்ற மகத்துவப் போராளி
இப்படியான சூழலில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளின் நினைவுகள் நம் இனத்தையும் நம் இனத்தின் பெண்களின் மனவலிமையையும் நலமும் பலமும் ஊட்டக்கூடியது.
வருடத்தில் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியன்று, தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் அணியினர் துவங்கப்பட்டிருந்த சமயத்தில் 1987 ஒக்டோபர் 10ஆம் திகதி இந்திய இராணுவத்தினருடன் நடந்த சமரில் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் கோப்பாயில் வீரச்சாவை தழுவிக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் புலி விதையாக வீழ்ந்த மாலதியின் நினைவுநாளே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகும்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட மாலதி அவர்களின் வீர மரணம், ஈழப் பெண்களின் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பெருந்தாக்கமாய் மாறிற்று. காயமடைந்த நிலையில், தொண்டைக் குழியில் நஞ்சுடன் “எனது துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்” என்ற அவரின் இறுதிக் குரல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றும் அடங்காத தீராத குரலாயிற்று.
தமிழீழத்தில் பெண்கள்
அன்றைய தமிழீழம் என்பது பெண்களுக்கு பேரிடத்தை வழங்கியது. ஆண்களும் பெண்களும் சமம் என்ற சிந்தனையை தான் உலக நாடுகள் ஆகச் சிறந்த அடைவென்றும் உயர்வென்றும் கொண்டிருந்த நிலையில், ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்கள் என்பதை வரலாற்றினாலும் சரித்திரத்தினாலும் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.
ஈழப் பெண்கள் தங்களின் தனித்துவ ஆற்றலால் இந்த உலகிற்கு முன்னூதாரணமாய் தம் முகங்களை பதித்திருக்கிறார்கள்.
1984களில் தமிழீழ விடுதலைப் புலிகள், பெண்களை படையில் இணைக்கத் துவங்கியிருந்தனர். மாலதியின் வீர மரணம் தமிழீழப் பெண்கள் மத்தியில் இன்னமும் பெண் எழுச்சிசை அதிகப்படுத்தியது. 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மகளீர் அணியின் பல்வேறு கட்டமைப்புக்கள் உதயமாகத் துவங்கின.
பாரம்பரிய தமிழ் சமூகத்தில் அச்சம் கொண்டு அடுப்படிகளில் தம்மை மறைத்திருந்த பெண்களுக்கு புதிய அடையாளத்தையும் நிமிர்வையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் வழங்கியது. போர்க்களத்தில் மாத்திரமின்றி மக்களின் வாழ்வுக் களத்திலும் பெண்கள் தனித்துவமான வகையில் தமது வாழ்வை அமைத்தனர்.
விதவைகள் அதிகமுள்ள நாடு
பெண்கள் பாதுகாப்போடும் மதிப்போடும் வாழ்கிற ஒரு நாடு வளத்தையும் சிறந்த அடையாளத்தையும் கொண்டிருக்கும். பெண்கள் கண்ணீரோடும் பாரங்களோடும் வாழ்கின்ற நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும். ஒரு நாட்டின் அத்தனை செயற்பாடுகளும் பெண்களைத்தான் பாதிக்கின்றன. வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் பெண்தான் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறாள்.போரின் பாதிப்பிலும் பெண்கள்தான் அதிக துயரங்களைச் சுமக்க நேரிடுகிறது.
இக்காலத்தில் உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர். 85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
இதில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வடக்கு கிழக்கில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளி விபரத்தை இலங்கை அரசின் கணக்கெடுப்புகளின் வாயிலாகவே அறிகிறோம். அத்துடன், கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
போர் விதவைளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் இலங்கை அரசின் மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் கூறியிருக்கின்றன.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால் சிறுபான்மை ஈழத் தமிழர்களின் பெரும்பான்மையாக விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் வசிக்கின்ற நிலை வாயிலாக நாம் அவதானிக்க வேண்டிய செய்திகள் மிகவும் முக்கியமானது.
பெண்கள் விரும்பிய வாழ்வையும் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் ஏற்படுத்தியதுடன் மூட நம்பிக்கைகளில் இருந்தும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களில் இருந்தும் அர்த்தம் பொதிந்த விடுதலை ஒன்று பிறப்பதற்கு தமிழீழப் பெண்களின் எழுச்சி வழி சமைத்தது. இலக்கியம், சிந்தனை, அரசியல், போர்க்களம், வாழ்வு என்று அறிவியல் தளத்தில் சிந்தனைப் புலத்தில் ஈழப் பெண்களின் வாழ்வு நிகழ்ந்தது. இந்த அனுபவங்களை நாம் மீட்டிப் பார்ப்பது இன்றைய இனவழிப்பு காலத்தில் பெண்களினதும் ஈழத் தமிழ் மக்களினதும் மீட்சிக்கும் எழுச்சிக்கும் பெரும் பங்களிப்பை தரவல்லது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 October, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
