இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தலங்கள் இவை தான்..!
ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தல நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ளது. இலங்கை ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது.
குறிப்பாக கலாசாரங்கள் முதல் இயற்கை அழகு, சாகச நடவடிக்கைகள் மற்றும் அழகான கடற்கரைகள் வரை அனைத்தையும் கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு வேறு பல வெளிநாட்டவர்கள் வருகை தந்தாலும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினர் புகலிடத் தமிழர் ஆவர். அவர்கள் தமது தாயகத்தைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பான்மையோர் நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களின் பூரண விளக்கமின்றி அதிகம் இன்னல்படுகின்றனர்.
அந்தவகையில், இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளங்கள் பற்றி பார்ப்போம்
மிகிந்தலை
இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன.
மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இதன் அமைவிடம் வடக்கில் 80 பாகை ஆகவும் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் காணப்படுகின்றது இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளடங்கியுள்ளன.
சிங்கராஜா வனம்
இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும்.
இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமைத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடையே மிகப் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.
யால தேசிய வனம்
இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஒன்றாகும். மிகுந்த சுற்றுலாப் பயணிகள் செல்லும், பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசிய வனம் இதுவே ஆகும்.
இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ (378 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.
இவ்வனம் ஈரலிப்பான பருவப் பெயர்ச்சிக் காடுகள், நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் கடல்சார் ஈரநிலங்கள் போன்ற பல்வேறு வகையான சூழலியற் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இலங்கையின் முக்கிய பறவைகள் வாழிடங்கள் எழுபதில் இதுவும் ஒன்றாகும்.
யால தேசிய வனத்தில் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும் 2009 ஆம் ஆண்டு இக்காட்டின் உட்பகுதியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.
பாசிக்குடா(Pasikudah)
மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும்.
அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும் புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாகும்.
இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. தற்போது ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அறுகம் குடா
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமாகும் அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.
அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது.
அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன.
ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது.
பேராதனை பூங்கா
பேராதனை பூங்கா இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும்.
இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.
மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது.
இதன் மொத்தப் பரப்பளவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓர்க்கிட் பூங்கா புகழ் பெற்றது.
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.
முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது.
1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது.
தற்போது இந்த கட்டிடம் யாழ்ப்பணத்தின் அடையாளமாக விளங்குவதுடன் சுற்றுலாத்தளமாகவும் விளக்குகின்றது.
குமண தேசிய வனப்பகுதி
குமண தேசிய வனப்பகுதி அம்பாறை மாவட்டத்தின் பாணமை பிரதேசத்தில் அமைந்துள்ளது.
குமண வனப் பகுதி யால விலங்குகள் சரணாலயத்தின் ஒரு எல்லையாக காணப்படுகிறது.
இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கும்புகன் ஓயா எனும் ஆற்றின் ஒரு கரையில் குமண வன பகுதி அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக பகுதிக்குள்ளும், மறுகரை அம்பாந்தோட்டை மாவட்ட நிருவாகத்துக்குள்ளும் அடங்குகின்றமை சிறப்பம்சமாகும்.
தம்புள்ளை
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும்.
இது கொழும்பில் இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது
முதன்மையான சந்தியில் அமைந்துள்ள இதன் அமைவிடம் காரணமாக இலங்கையின் மரக்கறி விநியோகத்தில் தம்புள்ள முக்கிய இடம்வகிக்கின்றது.
இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக தம்புள்ளை பொற்கோயில் அமைந்துள்ளது.
இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் தெற்காசியாவில் பேரு வீச்சில் காணப்படுவதான இளஞ்சிவப்பு படிகக் கற்களால் ஆன மலைகள், நா மரக் காடுகள் என்பன இங்கு முக்கியத்துவமானவையாகும்.
அம்பலாங்கொடை
அம்பலாங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும்.
இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் ஏ-2 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது.
இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.