சுற்றுலாத்துறையை பாதிக்கும் விசா முறை : பங்குதாரர்கள் எச்சரிக்கை!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா முறையினால் (Tourist Visa) ஏற்பட்ட குழப்பம், மற்றும் விசா கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைவடையலாம் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் (2024) இலங்கைக்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் 2 மில்லியனுக்கும் குறைவாக சுற்றுலாப்பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தற்போது விசா கட்டணங்கள் அதிகரித்திருப்பதனால் இலங்கைக்கு வருகைதருவதற்கு மக்கள் விருப்பம் காட்டவில்லை என்றும் முன்பதிவு செய்த பயணிகளும் அவர்களது பதிவுகளை ரத்து செய்ய கோரியுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கத்தின் (SLAITO) துணைத் தலைவர் பொபி ஜோர்டான் ஹன்சன் (Bobby Jordan Hansen) தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை பாதிப்பு
விசா கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு சுமார் 25 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருப்பதாகவும், 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை கருதுமிடத்து இது மொத்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது இது முந்தைய காலங்களில் குறைந்த தொகையாக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலை தொடருமானால் குளிர்காலத்திற்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி வேகத்தை விசா பிரச்சினை தடுக்கும் என்று இலங்கை சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் இந்த புதிய விசா முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இது தொடர்பாக குடியகல்வு மற்றும் குடிவரவுத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.