நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
நுவரெலியாவில் வருடந்தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தருகின்றனர்.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையால் சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறையை கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகர் ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் நகர்ப்பகுதிகளில் கூடுதலான எண்னிக்கையில் போக்குவரத்து காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விசேட பாதுகாப்பு
அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகளிலும் முன்கூட்டியே பதிவுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |