பயணக்கட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஏழு நாள் பயணக் கட்டுப்பாட்டை சுயமாக விதித்து வீடுகளிலேயே முடங்கி இருக்குமாறு சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முந்தைய கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இனி பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த மாட்டோம் என்று அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
"சில நாட்களாக, தினசரி 3000+ நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. ஒரு நாளைக்கு 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின்றன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் ”என்று அவர் எச்சரித்தார்.
நேற்றையதினம் புதிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. எனவே, எதிர்காலத்தில் நாட்டில் எந்த பயணக் கட்டுப்பாடுகளையும் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கோர மாட்டோம்.
எனவே பொது மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சேகரித்து வீட்டிலேயே இருக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். திங்கட்கிழமையிலிருந்து சுய ஒழுக்கத்துடன் இருப்போம், சுய கட்டுப்பாடுகளை விதித்து, இந்த தொற்றை நாட்டிலிருந்து ஒழிக்க உதவுவோம்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து வெளியே வந்து தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் மக்களின் துயரங்களை நேரில் பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.