புத்தளத்தில் புதையல் வேட்டை: ஐவர் அதிரடி கைது
புத்தளம் (Puttalam) - கருவலகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில், புத்தளம் - கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கேற்றி பூஜை
இதன்போது, சந்தேக நபர்கள் விளக்கேற்றி பூஜை செய்த பின்னர், புதையல் எடுப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், நிக்கவெரட்டிய, வித்திக்குலிய மற்றும் நவகத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 5 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு, பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கருவலகஸ்வெவ காவல் நிலையத்தில் திணைக்களத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில், மேலதிக விசாரணைகளில் கருவலகஸ்வெவ காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |