யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு!
🛑 யாழ் பல்கலைக்கழகம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாணவர்கள் , விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
🛑 யாழ் மாநகரசபை
தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் முதல்வர் வி.மதிவதனி தலைமையில் சபா மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர் நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.
முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
🛑 பருத்தித்துறை
பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது.
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போலால் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை வெளிப்படுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 12 மணி நேரம் முன்