திருகோணமலை புத்தர்சிலை : யாழில் கிளம்பிய எதிர்ப்பு
திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்ட விகாரைகள்
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் கடற்கரையில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் எதிர்ப்பையும் மீறி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

கடந்தகால அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் பல விகாரைகளை அத்துமீறி கட்டியிருந்தன. அதற்கு துணையாக இராணுவம், காவல்துறை, புத்தபிக்குகள் துணையோடுதான் இந்த புத்த விகாரைகள் அமைக்கப்பட்டன. இந்த புத்த விகாரைகள் சிலைகள் உண்மையில் ஒரு ஆக்கிரமிப்பு சின்னமாகவே இருக்கின்றன.
சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலைகள்
சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் இவ்வாறு புத்தர் சிலைகள் அமைக்கப்படுவது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான செயற்பாடுகள் உண்மையில் ஒரு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இதனை மதங்களுக்கிடையில் ஒரு பிளவை அல்லது பிரச்சினையை ஏற்படுத்துவதாகவே பார்க்கின்றோம்.
அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலையை உருவாக்கிவிட்டு அங்கு சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஒரு ஆக்கிரமிப்பாகவே பார்க்கமுடிகிறது.
வன்மையாக கண்டிக்கின்றோம்
உண்மையில் நீதிமன்ற அனுமதியில்லாமல் காவல்துறை அனுமதியில்லாமல் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த அரசாங்கம் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை பலத்துடன் அதாவது மூன்றில் இரண்டு பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசாங்கம் இனமத மொழி வேறுபாடின்றி ஆட்சி செய்வதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் எவ்வாறு இனவாத உச்சத்தில் ஆட்சி செய்ததோ அதேபோன்று இந்த புத்தர் சிலை வைப்பு இடம் பெற்றிருக்கின்றது.
உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டுமாக இருந்தால் இந்த அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிடவேண்டும், இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் இடம் பெறகூடாது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |