திருகோணமலையில் கைவிடப்பட்ட இராணுவ முகாமிற்குள் நுழையும் பௌத்த மதகுரு
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் குரங்குபாஞ்சான் கைவிடப்பட்ட இராணுவ முகாம் காணிக்குள் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவொன்று சென்று வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இராணுவ முகாமிற்குள் பௌத்த பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் நேற்றும்(03) இன்றும்(04) சென்று வந்துள்ளதாக கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி வான் எல் காவல்துறையினருக்கும் கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமுக்குள் குறித்த பௌத்த மதகுரு உட்பட்டகுழுவினர் சென்று வருவதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தீவிர விசாரணை
இந்நிலையில், இந்த இராணுவ முகாமிற்குள் குறித்த குழுவினர் பௌத்த சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது புதையல் ஏதும் தோண்டுவதற்கு உட்படுகின்றார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிண்ணியா பிரதேச மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இவர்களின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்களும், முன்னாள் நகர சபை உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.