இரகசிய தகவலையடுத்து இடம்பெற்ற முற்றுகை- பல இலட்சம் பெறுமதி!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்ட நிலையில் சந்தேச நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினரிற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்ற சமிந்த பெர்னாந்துவின் ஆலோசனைக்கு அமைய கிண்ணியா பொலிசார் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் போதே சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றி வளைக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 7 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவைகளில் சுமார் 3 இலட்சத்து 60 மில்லி லீட்டர் கசிப்பு இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோன அச்சம் காரணமாக மதுபான சாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதனால் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் முன்னிலைப்பைடுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



