திருகோணமலை விவகாரம் : டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திய ஈபிடிபி
இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடகச் செயலாளர் ப.ஸ்ரீகாந், டக்ளஸ் தேவானந்தாவின் இலாவகமான அணுகுமுறையினால் உருவாக்கப்பட்ட தமிழ் குடியேற்றங்களே திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இன்றளவும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்த பெருமானின் சிலை பிரதிஸ்டை
"தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில், கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஏற்படுத்திய சட்ட ரீதியான தடைகளை மீறி புத்த பெருமானின் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நாட்டிலே பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்ற சிங்கள பௌத்த மக்களுள் ஒரு பிரிவினர், மத்தியில் மேலாதிக்க சிந்தனைகளும், இனவாத மதவாத சித்தாந்தங்களும் நச்சு செடிகளாக புரையோடிப் போய் இருப்பது புதிய விடயமல்ல.
இதன்காரணமாகவே, 70 களிலும் 80 களிலும் எங்களின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, உட்பட்ட அன்றைய இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
அந்த துரதிஸ்டமான சூழல் இன்றும் இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த நச்சு செடி அழிக்கப்பட முடியாத ஒன்றாக, இந்த நாட்டின் சாபக்கேடாக இந்த நாட்டிலே காணப்படுகின்றது.
இந்த நாட்டின் சாபக்கேடு
இந்த யதார்த்தத்தினை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும், பேரினவாத சிந்தனைகளுடனும் மதவாதச் சித்தாந்தங்களுடனும் சமரசம் செய்து தங்களை வலுப்படுத்த முனைவார்கள் அல்லது எதிர்க் கட்சிகள் அதனை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் எனபதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

கடந்த காலங்ளில் நாம் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில், யதார்த்தங்களை லாவகமாக கையாண்டமையினால், எமது தாயகப் பிரதேசங்களில் எமது மக்களின் இருப்பை சிதைக்கும் நோக்கோடும், எங்களுடைய தொன்மையை அழிக்கும் நோக்கோடும், எமது மக்களின் ஆதிக்கத்தினை குறைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு தி்ட்டங்களை தடுத்து நிறுத்த முடிந்திருந்தது.
டக்ளஸின் தீர்க்க தரிசனம்
பல உதாரணங்களை சொல்ல முடியும். குறிப்பாக, 1994 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச காணியில் குடியேற்றங்களை உருவாக்க ஒரு தரப்பு திட்டமிட்டதை அறிந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, லாவகமாக குறித்த இடத்தில் 13 தமிழ் குடியேற்றங்களை உருவாக்கினார். இந்தக் குடியேற்றங்களே திருமலையில் இன்றளவும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையாவது பாதுகாத்தூள்ளது.

அதேபோன்று, திருக்கோணேஸ்ரம் ஆலயத்தின் தொன்மையை சீரழிக்கும் வகையிலான கட்டுமானங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு, யாழ்ப்பாணத்தில் தனிநாயகம் அடிகளாரின் சிலை அமைத்தமை, நாவற்குழியில் குடியேற்றம் அமைத்தமை , கடலட்டை பண்ணைகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கியமை போன்ற விடயங்களை லாவகமாக கையாண்டிருந்தார்.
அநுர அரசில் அப்படி ஒருவர் இல்லை
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில், இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்ட, விடயங்களை தமிழ் மக்களின் இருப்பு மற்றும் எதிர்காலம், பதுகாப்பு சார்ந்து சிந்தித்து லாவகமாக விடயங்களை கையாளக்கூடிய ஒருவர் இல்லை என்பதையே திருகோணமலை விவகாரம் வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சார்ந்து இவ்வாறான விடயங்களை கையாளுகின்றவர்கள் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். வெறுமனவே, உணர்ச்சிவசப்பட்டு உணர்வு ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது எமது மக்களின் தலைகளில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது என்பதை புரிந்து செயற்பட வேண்டும். இதனை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 5 நாட்கள் முன்