அமெரிக்காவின் விரோத பார்வைக்குள் சிக்கிய இந்தியா: கேள்விக்குறியாகும் இருநாட்டு உறவு!
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளுக்கு, ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா நேரடியாக நிதி ஆதரவு அளிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தச் சொல்லி ட்ரம்ப் அழுத்தம் உருவாக்கி வரும் சூழ்நிலையிலேயே, இந்தக் கடுமையான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு அதிர்ச்சி
மில்லர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலம், ரஷ்யாவின் போருக்கு நிதி வழங்கி வருகிறது.இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையில் இந்தியா சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பதும், அதை மக்கள் அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வரை ட்ரம்ப் தரப்பில் இருந்து இந்தியாவைப் பற்றிய விமர்சனங்களில் இது மிகவும் கடுமையானது என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் அழுத்தம்
இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய பங்காளி என்ற நிலை இருந்தாலும், ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் எரிபொருட்கள் வாங்கியதற்காக, இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வரிகள் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.
மேலும், உக்ரைனுடன் ரஷ்யா ஒருபோதும் நிலையான சமாதானத்திற்கு வராவிட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளிடமிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அரசு சார்ந்த வட்டாரங்கள், அமெரிக்காவின் அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் என உறுதியாக கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், மில்லர் தனது விமர்சனத்தின் முடிவில், ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடியின் உறவைக் குறிப்பிட்டு, அந்த உறவு உயர்வானதும் ஆழமானதும் என்ற பிம்பத்தைப் பாதுகாத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
