அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், கலிபோர்னியாவில் 20,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தபால் வாக்குகளை எண்ணுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாக்காளர்கள் அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்களாக இருக்கலாம் என மத்திய அரசின் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த தடை கோரல் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் அடிப்படையில், அந்த வாக்காளர்களின் வாக்குச் சீட்டுகளைத் தனியாக ஒதுக்கி வைக்குமாறு கடந்த மாதம் அமெரிக்க நீதித்துறை கலிபோர்னியா மாநில அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
உள்நாட்டுப் பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பின்னர், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தைச் (DHS) சேர்ந்த ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் கலிபோர்னியாவின் பல்வேறு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.

அந்தக் கடிதங்களில், குறித்த வாக்குகளைத் தனியாக ஒதுக்கி வைக்கத் தவறினால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வார இறுதியில், வாக்குகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபடும் மாநில மற்றும் உள்ளூராட்சி தேர்தல் அதிகாரிகளை குற்றவியல் வழக்குகள் மூலம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்க மத்திய அரசுக்கு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அமெரிக்காவில் தேர்தல் நடைமுறை, வாக்காளர் தகுதி மற்றும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகார வரம்பு தொடர்பான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |